Friday 9 February, 2018

கருப்பூர்


திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் உள்ளது இங்கிருந்து உள்ளே 3 கி.மீ தொலைவில் சின்ன கருப்பூர், பெரியகருப்பூர், எனும் சிற்றூர்கள் அடுத்தடுத்து இருக்கிறது. இதில் சின்ன கருப்பூர் வளைவில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. ”பார்சுவநாயகி சமேத ஸ்ரீ அக்னீச்வரர்” என பெயர்ப் பலகை காட்டுகிறது. 
பெரிய அகலமான சுற்றுச் சுவர்கொண்ட விசா ல மான கோவில். எதிரே ஒரு குளம்.கோபுரம் அற்ற அடித்தளம் மட்டும் இருக்கிறது. உள் நுழைந்ததும் இடப்புறம் அம்மன் சன்னதி. அருள்மிகு பார்சுவநாயகி அம்மன். அதை தாண்டினால் சுவரில் அதிகாரநந்தி புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. பலிபீடமும், நந்தியும், உள்ள முன் மண்டபம் இடிந்து தூண்கள் மட்டும் இருக்கிறது. அதனை கொண்டு ஓடு வேயப்பட்டுள்ளது.பக்கத்தில் ஸ்தல விருட்சம் வன்னிமரம்.அதைச் சுற்றி ஒரு மேடை அதில் அய்யனார உள்ளிட்ட சில சிலைகள் சற்று கூடுதல் உயரமான அம்மன் சிலை ஒன்றும் இருக்கிறது.
அர்த்தமண்டபம் தாண்டி உள்ளே சென்றால் அக்னீஸ்வரரை அருகே நின்று தரிசிக்க முடிகிறது. கோவில் வரலாறு தெரியவில்லை. அந்த இடத்தில் நிற்பது ஒரு மனநிம்மதியை கொடுத்தது. சில கோயில்களில் மட்டும் இதை சட்டென உணர முடியும். அது கோவில் காரணமா அல்லது எனது மனநிலை காரணமா தெரியவில்லை.
கோவிலை சுற்றி வந்தால் நவக்கிரகங்கள் தனி மண்டபத்தில். இன்று சனி பெயற்சி என்பதால் அங்கு ஏதோ ஹோமத்திற்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதையும் தாண்டி வந்தால் துர்க்கை, சண்டிகேஸ்வரர் தாண்டி ஒரு விநாயகர் சன்னதி.
எம்ஜிஆர் பட டைட்டில் போல ”நினைத்ததை முடிப்பவர்” என்கிற டைட்டிலுடன் இருக்கிறார் விநாயகர்ப்பெருமான். .வன்னிமரத்தை 21 முறை சுற்றினால் வேண்டிய வரம் கிடைக்கும் என ஒரு போர்டு இருந்தது.இப்படியெல்லாம் ஏதாவது சொல்லித்தான் மக்களை ஆகர்ஷிக்க வேண்டியுள்ளது.
கொஞ்ச நேரம் கோயில் வாசலில் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தோம். மனம் சஞ்சலமற்று இருந்தது. அந்தப்பக்கம் நீங்கள் போனால் ஜீயபுரடத்திலிருந்து உள்ளே இந்த அக்னீஸ்வரர் கோவிலுக்குப் போய் வாருங்கள் உங்களுக்கும் அந்த அனுபவம் கிட்டலாம்.
Image may contain: outdoor
Image may contain: tree, grass, sky, house and outdoor
Image may contain: outdoor and indoor
Image may contain: outdoor

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே