Thursday 20 November, 2014

அவள் அப்படித்தான்.

           


                    இன்றோடு ஒரு வருடம் ஓடிவிட்டது பாலா அத்தை மறைந்து.எங்கேயோ இருப்பது மாதிரியே இருக்கிறாள். அழகான ராட்சஷி.60 வயது வாழ்ந்து மறைந்தது போலவே தோன்றவில்லை. என்னமோ அல்ப ஆயுசில் மறைந்து விட்டது போலவே இருக்கிறது.அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டாள். பாலா அத்தை அப்பாவுக்கு கடைசி தங்கை. ரொம்பச் செல்லம். அந்தப்பீடம் நான் பிறந்ததும் பறிக்கப்பட்டது. அப்பாவின் கடைசி செல்லம் நானானேன் ( வழிச்சு குத்தின தோசை).அத்தைக்கும் நான் என்றால் ரொம்பப் ப்ரியம்.சின்ன வயதில் எனக்கு ரெட்டைப் பின்னல் பின்னுவதும், தாடை வலிக்க அழுத்திக்கொண்டு என் கண்ணில் மையிடுவதும்,அத்தையின் அன்றாடப் பணிகளில் ஒன்று.

              எலந்தப் பழக் கூடைக்காரி வீட்டு வாசலில் கூடையை இறக்கிவைத்துவிட்டால் மீண்டும் அதை தூக்குவதற்குள்  இரத்தக்கண்ணீர் வரவழைத்துவிடுவாள் அத்தை. அளக்கும் போதே தான் ரெண்டு எனக்கு ரெண்டு என பழம் பாஸ் ஆகிக்கொண்டே இருக்கும்.உழக்குக்கு மேல் இன்னும் ஒரு உழக்கு அளவிற்கு கையை வைத்து அளக்கும் அத்தையின் சாமர்த்தியம் அழகு.நடு நடுவே அந்த கூடைக்காரியிடம் குசலம் விசாரிப்பு வேறு நடைபெறும்.

           என் பால்யம் அத்தையுடன் பெரும்பாலும் இருந்தது.ஆற்றில் தண்ணீர் வந்து வடியும் சமயத்தில் விடுமுறை நாட்களில் அத்தையுடன் ஆற்றுக்குச் செல்வேன். துணிகளை சின்ன மூட்டையாய்க் கட்டி என் தலையில் வைத்துவிட்டு தானும் ஒரு மூட்டையுடன் ஆற்றுக்கு வருவாள்.அத்தை கரையோரம் துணி துவக்க நான் நீரில் ஊறிக்கொண்டிருப்பேன் துணி முடித்து திரும்பும் வரை.

      எதையும் சாதாரணமாக பார்க்கவோ, சொல்லவோ தெரியாது அத்தைக்கு. எல்லாவற்றிலும் ஒரு ஆச்சரியமும், அதிசயமும் இருப்பதாகவும் அதை அத்தைதான் கண்டுபிடித்தது போலவும் பேசுவாள். அது உப்புபெறாத விஷயமாக இருக்கும் ஆனால் அத்தை அத்தனை ஆலாபனைகளோடு நீட்டி முழக்கி சொல்வாள். எனக்கு அப்போதெல்லாம் அது தேவதைகள் நிறைந்த உலகில் சொல்லப்படும் கதைபோல இருக்கும்.

         அத்தையின் கையை பிடித்துக்கொண்டு அவள் வேகத்துக்கு விருத்தாம்பாள் கோவில் சுற்றுவது அவ்வளவு லேசு அல்ல.தினமும் 16 சுற்று சுற்றுவாள். எல்லாமே அசுர சாதகம்தான்.ஏதோ ஒரு சதவீதம் தப்பி அத்தை பெண்ணாக பிறந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றும்.

           சுடுகாட்டுக்குப் வரும் பெண்களை பார்த்திருக்கிறீர்களா?. என் பாட்டி, பெரியம்மா, அத்திம்பேர், அப்பா,சித்தப்பா என எல்லோருடைய எரியூட்டல் நிகழ்விலும் நான் சுடுகாட்டில் அத்தையுடன் இருந்திருக்கிறேன். நேற்று எரிக்கப் பட்ட உறவுகளை இன்று கையில் கண்டங்கத்தரி கட்டிக்கொண்டு குச்சியால் சாம்பலைக் கிளறி தேடுவாள். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கமெண்ட் அத்தையிடமிருந்து வரும். இந்த எலும்பை பார்த்தியா? மஞ்சளா இருக்கு பார்? எல்லாம் அவ்ளோ மாத்திரை மருந்து என அப்பாவுக்குச் சொன்னாள்.” ”ஒரு எலும்பு கூட கிடைக்கலையே? பூ மாதிரி பஸ்பம் ஆயிட்டாரே?”- இது திருவாரூர் அத்திம்பேருக்குச் சொன்னது.கிட்டத்தட்ட பிரேதத்தை வைத்து அனாடமி வகுப்பெடுக்கும் மருத்துவ ஆசிரியரைப்போல அத்தை சொல்லிக்கொண்டு போவாள்.எனக்கு அத்தையின் இந்த ஆராய்ச்சியெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

               ஒரு வசந்த காலத்தில் அத்தைக்குத் திருமணம் ஆனது. அந்த ராஜகுமாரி எங்கள் வீட்டைவிட்டு சந்தோஷமாக டாடா காட்டிக்கொண்டே போனாள். பொதுவாக திருமணமாகி புகுந்த வீடுச் செல்பவர்கள் கண்கலங்குவார்கள் அல்லவா அந்த மரபெல்லாம் அத்தையிடம் இல்லை. வேனில் ஏறிக்கொண்டு டாடா காட்டினாள். அப்பாவுக்குத் தான் கண்கலங்கியது. ஒரு பெண் கணவனால் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும், ஆராதிக்கப்பட்டும் இருந்துவிட்டால் அவள் முகத்தில் இருக்கும் பூரிப்புக்கு எல்லையே இல்லை.அத்தைக்கும் அப்படியொரு ராஜகுமாரன் தான்  வாய்த்தார்.அவள் கையில் கிடைத்த ஸ்டியரிங் மூலம் அவள் விரும்பியபடியெல்லாம் பயணித்தாள்.

                   கால ஓட்டத்தில் ஒரு சமயம் அவளை பகைத்துக்கொண்டு நான் திருமணம் செய்தபோது பலமாக எதிர்த்தாள். சாபம் விட்டாள்.செல்லும் இடங்களில் எல்லாம் வன்மத்தை விதைத்தாள்.எதிலும் தீவிரம் தான்.

                       எனக்கு மகன் பிறந்த உடன் பார்க்க ஓடி வந்தாள். அதன்பிறகான என் வளர்ச்சியை கண்டு பெருமைப்பட்டாள்.எந்த நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் ஓடி வந்து ”வாடா மணி” என வாஞ்சையுடன் அழைப்பாள். பாசாங்கு இருக்காது. எல்லோரும் பார்க்கும்படி தனியே அழைத்துப் போய் ஏதாவது பேசுவாள். திருமண வைபவங்களில் என் மனைவி ஜெயந்தி எங்கிருக்கிறாள் என்று தேடிவந்து பூவை தலையில் வைத்துவிடுவாள்.

                எல்லாவற்றிலும் வேகம்…அன்பு காட்டுவது என்றாலும், அதிகாரம் செய்வது என்றாலும், அடியோடு வெறுப்பது என்றாலும்….அது தான் பாலா அத்தை. பெரியவ்ன் ஆனபிறகான காலங்களைவிட பால்யத்தில் குறைந்தகாலம் பாலாஅத்தையுடன் இருந்ததே இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது எந்தக் கசடும் கலக்காத நதியைபோன்றது.

     இப்போது ஏதாவது சந்தோஷத்தை பகிரவேண்டிய தருணத்தின் போது அத்தையைத்தான் முதலில் தேடுகிறது மனது. . இப்போதும் நான் நடு ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பது போலும் கரையில் அத்தை துணி துவைத்துக்கொண்டிருப்பது போலும் தான் உணர்கிறேன்..

          இப்படியெல்லாம் எழுதப்பட்டதனால் இவள் தான் பாலா அத்தை என எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். அவள் யாராலும் அளக்கமுடியாதவள். பிரம்மனின் அபூர்வப் படைப்பு. என் சந்ததியில் யாருக்காவது அவள் மீண்டும் பிறப்பாள்.அவளுக்கு வாழும் ஆசை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது.வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டவள் அவள். அத்தை அழகானவளா? ஆமாம்…கோபக்காரியா? ஆமாம்…..அன்பானவளா? ஆமாம்….. குழந்தை மாதிரியா? ….ஆமாம்,…இன்னும் எத்தனை ஆமாம்களும் போடலாம்…. ஏனெனில் “ அவள் அப்படித்தான்”

1 comment:

  1. மணிவண்ணன்21 November 2014 at 1:47 pm

    நினைவுகள் நம்மை உற்சாகமானதாக ஆக்கும் சுகமே தனிதான்

    ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே