Sunday 23 December, 2012

மற்றை நம் காமங்கள்


ஒவ்வொரு வருஷமும் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் செல்லும் போது செல்வரப்பமும்,சம்பாரதோசையும்,சுவைக்காமல் விடுவதில்லை என்ற கங்கணத்துடன் இருக்கிறேன்.

மூலவர் முத்தங்கி சேவை சில வருடம் வாய்ப்பதுண்டு.250 ரூ கியூவே ரெண்டு வரிசை நீண்டிருக்கும்.கியூமுழுதும் கருப்பும் சிவப்புமாக அய்யப்ப பக்தர்கள்.என்ன விலை கொடுத்தாவது தாங்கள் பர்த்த லிஸ்ட்டில் ரெங்கனை கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பிடிவாதத்துடன் வரிசையில் காத்திருப்பார்கள்.ம்...நானும் மலைத்துக் கொண்டே பகல்பத்து மண்டபத்தில் நம்பெருமாளை சேவித்துவிட்டு...அரையரின் குரலை காதை தீட்டிக் கொண்டு கொஞ்சம் கேட்டுவிட்டு,(ஜிங் சாங் சத்தம் தான் கேட்கும் ஒரு வார்த்தை கூட புரியாதுஎனக்கே இப்படி இனில் ஸ்ரீரங்கத்து வயதான மாமிகளுக்கு என்ன காதில் விழுதுவிடப் போகிறதுஆனாலும் அசாத்திய பொருமையுடன் நம்பெருமாளை சேவித்த வண்ணமே இருப்பர்.)

.சென்றமுறை பெருமாள் பூச்சாத்தலின் போது கைநிறைய மனோரஞ்சித பூ கொண்டுவந்திருந்தாள் பார்யாள்.ஆனால் பூவை வாங்கிக் கொள்ளும் சாத்தாதார் தொடுத்திருந்தால் தான் வாங்கிக் கொள்வோம் என சொல்லிவிட்டார்.இன்றும் கோவிலுக்குக் கிளம்பும் போது வீட்டில் பூத்த மனோரஞ்சிதம் மூன்று பெரிய பூக்களை பரித்து கையில் எடுத்துக் கொண்டாள்.அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள்,ராஜா.ரங்கராஜா……இரண்டு பக்கமும் வரிசையில் வந்து எட்டடி தூரத்திலிருந்து பெருமாளை சேவிக்கலாம்.அபயஹஸ்தம் ஜொலித்தது.ஒரு பட்டாச்சாரியார் அருகில் வந்தார் மனைவியிடமிருந்து பூக்களை வாங்கி அவர் கையில் கொடுத்தேன்.அதை எடுத்துக் கொண்டு நம்பெருமாள் அருகில் இருக்கும் இன்னொரு பட்டரிடம் கொண்டு கொடுத்தார்.அந்த பட்டரோ பூக்களை வலது கையில் வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டு இடது கையை மார்பை ஒட்டி பிடித்துக் கொண்டு வலது கையால் ஒவ்வொரு பூவையும் நம்பெருமாள் கை,மார்பு,தலை என பவ்யமாக வைத்தார்….மனைவிக்கு கண்ணில் நீர் திரண்டது.நீங்கள் பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் பெருமாள் எட்டு அடி உன்னை நோக்கி வருவார் என்ற திருவெள்ளரை கோவில் பட்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.மனம் நிறைந்தது.நம்பெருமாளைச் சுற்றி வந்து எதிரே இருந்த ஆச்சார்யர்,ஆழ்வார்களை சேவித்தோம்

சக்கரத்து ஆழ்வார்,தாயார் சேவைமுடித்து பிரசாத ஸ்டால் பின்புறம் உள்ள மண்டபத்தில்  கம்பி கிரில் கேட்டுக்கு பின்புறம் நம் அயிட்டம் தான்,அவசர அடி புளியோதரை இந்த காலத்தில் சாப்பிடுவதை தவித்துவிடுவது நல்லது.கலந்ததும் கலக்காததுமாய் உருண்டையும் கட்டியுமாக புளியோதரை முறைத்துக் கொண்டிருக்கும்எலுமிச்சம் பழ சீசன் அதனால் தோசைக்கான ஊறுகாயில் தளர் முழித்துக் கொண்டிருக்கும்.வடை பல்வேறு வர்ணஜாலங்களில் போட்டு எடுப்பவரின் ஜோலியை பொருத்து சிவப்பாகவும்,கருப்பாகவும்,பொன் நிறத்திலும் ஜொலிக்கும்.எப்போதும் சூடாக இருக்கும்.பெரிய கோபுரத்திற்கு பிறகு உளுந்து தோலுடன் கூடிய வடையும் இங்கு விசேஷம்.நிற்க என்ன விசேஷமாக இருந்தாலும் டயாபிடிஸ் காரனுக்கு டயட் முக்கியம் என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு மதிப்பளித்து’”மற்றை நம் காமங்கள் மாற்றேலேரோ ரெம்பாவாய் “ என மனதிற்குள் வேண்டிக் கொண்டு ( என்ன இல்லையோ அதைத் தானே கேட்கமுடியும்) வீடு வந்து சேர்ந்தோம்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே